மகாராஷ்டிர மாநிலத்தில் காணாமல் போன முதிய தம்பதியினர், பாதி எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண் அருகே உள்ள மாரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மஹாது கரத் (85) மற்றும் இவரது மனைவி கமலாபாய் கரத் (75). இவர்களை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் காணவில்லை என இவர்களது மகள்  காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மஸா பகுதியில் சாலையோரம் இரண்டு சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அவை காணாமல் போன மஹாது மற்றும் கமலாபாய் ஆகியோரின் சடலங்கள் என்பதை உறுதி செய்தனர். மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக சொத்து தொடர்பாக இந்த முதிய தம்பதிக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த மன உளைச்சல் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்துள்ள போலீஸார், சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.