ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தங்கிப் படித்து வரும் எம்பிஏ (MBA) மாணவி ஒருவர், மளிகைக் கடை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மாணவி ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்த 67 வயது கடை உரிமையாளர், மாணவி வீட்டில் தனியாக இருப்பதைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து இந்த கொடூரத்தைச் செய்துள்ளார்.
மேலும், இது குறித்து வெளியே சொல்லாமல் இருக்க மாதா மாதம் இலவசமாக மளிகைப் பொருட்கள் தருவதாகக் கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி தனது அறைத் தோழியிடம் விஷயத்தைக் கூற, நில உரிமையாளரின் உதவியுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முதியவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒடிசாவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன; குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் புவனேஸ்வரில் மட்டும் இத்தகைய குற்றங்கள் 139 சதவீதம் அதிகரித்துள்ளன.
வாடகை வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், போலீசார் ரோந்துப் பணிகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
