மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பிரமுகர் ஜஹாங்கீர் கானுக்கு விடுத்த எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பர்கானாஸ் மாவட்டத்தின் ஃபால்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஜஹாங்கீர் கான் போட்டியிடுகிறார். இவர் வாக்காளர்களை மிரட்டுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையெடுத்து, அந்தப் பகுதிக்கு நேரில் சென்ற ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா, ஜஹாங்கீர் கானின் குடும்பத்தினரிடம் பேசுகையில், வாக்காளர்களை மிரட்டுவதாக ஜஹாங்கீர் கான் மீது தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பொதுமக்களை யாராவது மிரட்ட முயன்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஜஹாங்கீர் கானுக்கு முறையாகத் தெரிவித்து விடுங்கள். பின்விளைவுகளைச் சந்திக்கும் போது, அழுது புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை,” என்று கடுமையாக எச்சரித்தார்.
ஜஹாங்கீர் கானின் வீட்டின் முன் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் நின்றிருந்ததைக் கண்ட அதிகாரி சர்மா, அதுகுறித்து விசாரணை நடத்தினார். ஜஹாங்கீர் கானுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், 10 வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக 4 வீரர்கள் அங்கு பணியில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு உள்ளூர் காவல் கண்காணிப்பாளருக்கு (SP) அஜய் பால் சர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Ajay Pal Sharma, the encounter specialist and “Singham” of UP Police, has been deployed as Police Observer in South 24 Parganas.
He wasted no time in setting the tone, firmly reading the riot act to the family members of Abhishek Banerjee’s close aide, Jehangir Khan.
The… pic.twitter.com/N5sYcDdJCG
— Amit Malviya (@amitmalviya) April 27, 2026
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில், ஏற்கனவே 152 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 92 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் தாமரை மலர்வது உறுதி; பாஜக அமோக வெற்றி பெறும்,” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 84 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 92 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
