மத்திய அரசின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது போன்றே ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் ‘அன்னபூர்ணா’ அல்லது ‘தானிய ஏடிஎம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது ஏற்படும் எடைக் குறைவு மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க ஏற்ப்பாடு செய்யவுள்ளது.
மேலும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயனாளிகள் தங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை போன்ற தானியங்களை வெறும் 35 வினாடிகளில், 25 கிலோ வரை துல்லியமான எடையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ‘அன்னபூர்ணா’ இயந்திரத்தைப் பயன்படுத்த, பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், கருவிழி ஸ்கேன் அல்லது கைரேகை பதிவின் மூலமும் பொருட்களைப் பெறலாம். தற்போது சோதனை அடிப்படையில் குஜராத் போன்ற சில மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் விரைவில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் தங்குதடையின்றி வெளிப்படையான முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
