கர்நாடக மாநிலம் துமகுருவில், தலித் தம்பதியினர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, மேல்சாதி நபர் ஒருவர் கடவுள் வந்ததாகக் கூறி ‘சாமியாடி’ நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கு வந்த அந்த நபர் திடீரென தனக்கு தெய்வ வாக்கு வந்திருப்பதாகக் கூறி, அவர்கள் உள்ளே வரக்கூடாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் தீண்டாமையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த நபரின் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் சாதிப் பாகுபாடு காரணமாகக் கடவுளின் பெயரால் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சமத்துவத்தை வலியுறுத்தும் இக்காலத்தில், வழிபாட்டுத் தலங்களில் நிலவும் இது போன்ற சாதியக் கொடுமைகளை ஒழிக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
