தமிழ்நாட்டில் அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் துல்லியமாகச் செயல்படுத்தும் நோக்கில், ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, முன்னுரிமை (Priority) மற்றும் அந்தியோதயா (Antyodaya) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் கோதுமைப் பொருட்கள் உண்மையானப் பயனாளிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ (Point of Sale) கருவிகள் மூலம் பயனாளர்களின் விரல் ரேகையைப் பதிந்து, ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இது போலி அட்டைகள் மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பதிவுப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், நிலுவையில் உள்ள பதிவுகளை விரைவாக முடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பதிவுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்கென குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.