கார்ப்பரேட் நிறுவனத்தில் திடீரென வேலை பறிபோய், ரூ.2 கோடி கடனில் தவித்த டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கடின உழைப்பால் மீண்டெழுந்து ரூ.6,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஆலோசகராக உயர்ந்த சாதனை பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த கௌரவ் காவத்ரா (37) என்பவர் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,

கடந்த 2018-ம் ஆண்டு சீன பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தேன். ஆண்டுக்கு ரூ.70 லட்சம் (மாதம் ரூ.5 லட்சம்) சம்பளம் கிடைத்தது. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நான், எனது கனவு இல்லத்திற்காக ரூ.2 கோடி வீட்டுக் கடன் வாங்கினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2018 செப்டம்பர் 12 அன்று, எனது பணித்திறன் சரியில்லை எனக் கூறி நிறுவனம் என்னை திடீரென பணிநீக்கம் செய்தது. வெறும் 3 நாட்கள் மட்டுமே நோட்டீஸ் காலம் வழங்கப்பட்டது.

கைநிறைய சம்பளம் வாங்கிய எனக்கு அடுத்தடுத்து 108 நிறுவனங்கள் வேலை தர மறுத்தன. கையில் பணமில்லை, தலையிலோ ரூ.2 கோடி கடன். அக்கம் பக்கத்தினரின் ஏளனப் பார்வையும், குழந்தையின் கேள்விகளும் என்னை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கின. இரவில் தூக்கமின்றி தவித்தேன்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்காகப் பிச்சை எடுப்பதை நிறுத்த முடிவு செய்தேன். சுயதொழில் மற்றும் ஆலோசனை (துறையில் கால் பதித்தேன். எனது திறமையும் அனுபவமும் எனக்கான புதிய பாதையை வகுத்துக் கொடுத்தன. தற்போது இந்தியாவின் 19 மாநிலங்களில் உள்ள 65-க்கும் மேற்பட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இதுவரை ரூ.6,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு முதன்மை ஆலோசகராகச் செயல்பட்டு சாதனை படைத்துள்ளேன்.

“கல்லூரிப் பட்டங்கள் காலப்போக்கில் காலாவதியாகலாம், ஆனால் நம் திறமையும் அனுபவமும் எப்போதும் அழியாது. அன்று வேலை பறிபோனது என் வாழ்க்கையின் முடிவல்ல, அது ஒரு புதிய மறுபிறவி” என்று கௌரவ் காவத்ரா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.