அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் இழப்பீடாகக் கிடைத்த ரூ.25 லட்சத்துடன், மனைவி மற்றும் 6 வயது குழந்தையை நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு, வாலிபர் ஒருவர் தன் காதலியுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் இமிலியா கிராமத்தைச் சேர்ந்தவர் நிலேஷ். இவருடைய மனைவி ருச்சி பரிஹார். இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதுவரை சாதாரண நடுத்தரக் குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில், ‘பணம்’ புயலாக வீசியுள்ளது.
சமீபத்தில், புந்தேல்கண்ட் தொழில் வளர்ச்சி ஆணையம் (BIDA) நிலேஷின் தந்தைக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஒரு திட்டத்திற்காகக் கையகப்படுத்தியது. இதற்கான இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து அவரது தந்தைக்கு சுமார் 1 கோடி ரூபாய் கிடைத்தது. இந்தத் தொகையை அவர் தனது மூன்று மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இதில் நிலேஷின் பங்காக ரூ.25 லட்சம் அவரது வங்கித் கணக்கிற்கு வந்துள்ளது.
திடீரென கைநிறையப் பணம் வந்தவுடன் நிலேஷின் குணத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடம்பரமாக வாழத் தொடங்கியவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பணத் திமிரிலும், காதலியின் மோகத்திலும் மூழ்கிய நிலேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு, மனைவி, குழந்தையைத் தவிக்கவிட்டுவிட்டுத் தனது காதலியுடன் நிலேஷ் கிராமத்தை விட்டே ஓட்டம் பிடித்துள்ளார். கணவன் ஏமாற்றிவிட்டுச் சென்றதால், சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்த ருச்சி பரிஹார், வேறு வழியின்றி தனது 6 வயதுக் குழந்தையுடன் தங்களது பெற்றோர் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்தார்.
மேலும் தொடர்ந்து, தனக்கும் தன் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், கணவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரியும் ருச்சி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நிலேஷ் மற்றும் அவரது காதலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
