மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் ஈகோ பார்க் வளாகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் சொகுசு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருக்கும் போதெல்லாம் இந்த பூங்காவிற்கு காலை நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திலீப் கோஷ், நேற்று காலை சுமார் ரூ.53 லட்சம் மதிப்புள்ள அதிநவீன சொகுசு பைக்கில் வலம் வந்துள்ளார். அப்போது அவரும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் எவ்வித தலைக்கவசமும் அணியாமல் சென்றது நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பலமுறை பைக் ஓட்டிச் சென்று செய்திகளில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், தற்போதைய இந்த வீடியோ, விஐபி கலாச்சாரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தை மீண்டும் பொதுவெளியில் கிளப்பியுள்ளது.
Why no helmet? Why? https://t.co/24TNqjUEct
— Kushan Mitra (@kushanmitra) May 29, 2026
மேலும் சாமானிய மக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடுமையான போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்படும் நிலையில், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் இத்தகைய விதிகளைத் துணிச்சலாக மீறுவது முறையல்ல என்றும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொது நபர்கள் மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
