தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் பயணிகளுக்கு பெரும் சுமையாகவும், விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது. இந்த நீண்ட நாள் புகாருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சங்க பிரதிநிதிகள், தமிழக போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்கள் மற்றும் தங்களின் புதிய கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறுகையில், “விழாக்கால கட்டண உயர்வு என்ற பல ஆண்டு கால குற்றச்சாட்டைத் தீர்க்க நாங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500 ஆம்னி பேருந்துகளை வருடம் முழுவதும் அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு அனுமதி கோரி முதலமைச்சரிடம் விண்ணப்பம் அளித்துள்ளோம். இதற்குத் தயாராக இருப்பதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துப் பரிசீலித்து முடிவு சொல்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்குத் தனித்தனியாக பெர்மிட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்” என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், தற்போதைய ஆட்சியில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதாகப் பாராட்டினர். “ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் 40 பேருந்துகளுக்கு எங்களுக்கு பெர்மிட் கிடைத்துள்ளது. ஆனால், இதே பெர்மிட்டைப் பெறுவதற்கு முந்தைய ஆட்சியில் நாங்கள் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. பொதுவாக ஆர்.டி.ஓ அலுவலகங்களில்தான் முதல் ஊழலே தொடங்கும், ஆனால் இப்போது யாரும் லஞ்சம் கேட்பதே இல்லை. முன்பு அமைச்சர்களைப் போய்ப் பார்த்த பின்பே வேலைகள் நடக்கும், ஆனால் இப்போது அதிகாரிகளே நேரடியாக பெர்மிட் வழங்குகிறார்கள். இந்தத் தூய்மையான மாற்றத்தை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்
நிர்வாக ரீதியாகத் தங்களுக்கு ஏற்படும் சில தடங்கல்கள் குறித்தும் அவர்கள் முதல்வரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய லஞ்சமில்லா சூழலால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் போயுள்ளது என்றும், இதனால் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க முயன்று தோல்வியடைவதாகவும் கூறினர். இதன் காரணமாக, நேர்மையான அதிகாரிகளுக்கு எதிராக யூடியூப் தளம் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்பி, அவர்களை இடமாற்றம் செய்ய வைக்கும் சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினர். நேர்மையாகச் செயல்பட்ட போக்குவரத்து கமிஷனர் ஒருவர், பணம் வாங்கியதாகப் பொய் பழி சுமத்தப்பட்டு 40 நாட்களிலேயே மாற்றப்பட்டிருப்பதையும், இந்த இடைத்தரகர்களின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
