தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வியூகங்களும் கட்சித் தாவல்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த முக்கிய வழக்கொன்று, தற்போதைய அரசியல் சூழலால் சுமுக முடிவுக்கு வந்துள்ளது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பாக மதியழகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தேர்தல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியல் காட்சிகள் வேகமாக மாறின. அதிமுகவைச் சேர்ந்த முக்கிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக, அண்மையில் கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதன் மூலம், நேற்று வரை கரூர் தொகுதியில் எதிரெதிர் துருவங்களாக நின்ற மதியழகனும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இன்று தவெக என்ற ஒரே குடையின் கீழ் இணையும் சூழல் உருவானது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்துவிட்டதால், அவர் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என மதியழகன் தரப்பு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மதியழகன் தரப்பில் முறையிடப்பட்ட போது, வழக்கை வாபஸ் பெறுவது குறித்து முறைப்படி மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். ஒரே கட்சியில் இணைந்ததால் கரூரின் இரு பெரும் தலைவர்களுக்கிடையேயான தேர்தல் பகை முடிவுக்கு வந்துள்ள விவகாரம், தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
