இன்றைய டிஜிட்டல் உலகில் தினந்தோறும் பல திகைப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், சில வீடியோக்கள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பதைபதைக்க வைக்கும் வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகிலேயே மிகவும் அபாயகரமான, அதி பயங்கர விஷம் கொண்ட ‘கிங் கோப்ரா’ எனப்படும் ராஜநாகத்தின் மிக அருகில் சென்று, நபர் ஒருவர் செய்த விபரீத ஸ்டண்ட் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஓட்டம் கொண்ட அந்த வீடியோவில், பிரம்மாண்டமான ராஜநாகம் ஒன்றின் மிக அருகில் ஒரு நபர் சற்றும் பயமின்றி அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவரது முகத்தில் மரண பயத்தின் எந்தவொரு சுவடும் தெரியவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு, மெதுவாக எழும் அந்த நபர், நேராக அந்தப் பாம்பின் முகத்திற்கு நேரே நின்று அதையே உற்றுப் பார்க்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by King of Wild (@junglesurvivor7)

அத்தோடு நிறுத்தாமல், மேலும் ஒரு படி மேலே சென்று, சீறிக்கொண்டிருக்கும் அந்த ராஜநாகத்தின்  மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்று, வியர்த்து கொட்ட அதற்கு முத்தமிட்டார். இதனால் பதற்றமடைந்த அந்த ராஜநாகம், அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த நபரைத் தாக்க முயன்றது. நல்ல வேளையாக, அந்த நபர் மிக சாதுரியமாக நொடிப் பொழுதில் பின்வாங்கியதால், அதன் கொடிய விஷப் பற்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். ஒருவேளை அவர் பின்வாங்க லேசான தாமதம் ஏற்பட்டிருந்தாலும், அவரது உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்கும்.

தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் கண்டு தங்களது அதிர்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். “இதுபோன்ற ஆபத்தான செயல்கள் வீரமல்ல, முட்டாள்தனமான அலட்சியம்” என்றும், “வெறும் புகழுக்காகவும் லைக்ஸ்களுக்காகவும் சொந்த உயிரையே இப்படிப் பணயம் வைக்கலாமா?” என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வனவிலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, ராஜநாகம் என்பது மிகவும் எச்சரிக்கையான மற்றும் கொடிய விஷம் கொண்ட ஒரு உயிரினமாகும். பயிற்சி பெற்ற பாம்புகளை மீட்போர் அல்லது வனத்துறை அதிகாரிகள் தவிர, சாதாரண மக்கள் யாரும் இதன் அருகில் செல்வது தற்கொலைக்குச் சமம் என எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தாலும், இது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.