அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக சீனா பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றியதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தினார். டிரம்பின் இந்த அதிரடி பேச்சு தற்போது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் ரகசிய விவரங்களைச் சீனா சட்டவிரோதமாகப் பணம் கொடுத்து வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, எனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளைப் பரப்புவதற்காக அமெரிக்கப் பத்திரிகையாளர்களுக்குச் சீனா பெருமளவில் லஞ்சம் கொடுத்துள்ளது. எனவே, வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்த வேண்டும்; புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குச் சீனா உடனடியாகவும் காரசாரமாகவும் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்துச் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “டிரம்பின் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையானது மற்றும் ஆதாரமற்றது. சீனாவை உலக அரங்கில் திட்டமிட்டுக் களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மட்டுமே இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அமெரிக்கத் தேர்தலில் தலையிடுவதில் சீனாவுக்கு எப்போதுமே எந்த விருப்பமும் இருந்ததில்லை; நாங்கள் ஒருபோதும் அப்படிச் செய்ததுமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா தங்கள் நாட்டுத் தேர்தல் அரசியலில் சீனாவை ஒரு பிரச்சனையாகக் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வீண் பழி போடுவதைத் தவிர்த்துவிட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீனத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
