காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பின் தலைவனும், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்குபவனுமான ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை ஜம்மு சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த இரண்டு நாட்களிலேயே, சிறப்பு நீதிபதி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவாலும் அமெரிக்காவாலும் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட 76 வயதான ஹபீஸ் சயீத், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தத் துணை குற்றப்பத்திரிகையில், ஹபீஸ் சயீத் மீது அவரது தனிப்பட்ட தகுதியிலும், லஷ்கர்-இ-தைபா மற்றும் அதன் பதிலி அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ ஆகியவற்றின் தலைவர் என்ற அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சர்கோதா பகுதியைச் சேர்ந்த இந்த பயங்கரவாதி, வேண்டுமென்றே கைது நடவடிக்கையைத் தவிர்த்து தலைமறைவாக இருந்து வருவதாக என்ஐஏ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த வழக்கில் நியாயமான, முழுமையான மற்றும் பயனுள்ள விசாரணையை மேற்கொள்வதற்கு, குற்றம் சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத்தைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிப்பது இன்றியமையாதது. எனவே, அவருக்கு எதிராகக் காலவரையற்ற, பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதைச் சட்டப்படி செயல்படுத்துவதற்காக ஜம்மு என்ஐஏ பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அனுப்பப்படுகிறது” என்று நீதிமன்றத் தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமறைவாக உள்ள இந்த சர்வதேச பயங்கரவாதிக்கு எதிரான சட்ட வளையத்தை இந்தியா மேலும் இறுக்கியுள்ளது.
மறுபுறம், இந்தியாவின் இந்த அதிரடி சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இந்தியாவின் குற்றச்சாட்டுகளை வழக்கம் போல் மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்திராபி, “இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ள இந்தக் குற்றப்பத்திரிகை முற்றிலும் போலியானது. காஷ்மீரின் அரசியல் தலைமைகளைக் குறிவைப்பதற்காக, போலி சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான அரசியல் உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை” என்று காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் புகார்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான், தற்போது மீண்டும் ஒரு சர்வதேச பயங்கரவாதியைப் பாதுகாக்கத் தூதரக ரீதியாகத் துணிந்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
