ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது கண்கள் பார்க்குமா? அல்லது மரணத்திற்குப் பின் பல மணி நேரங்கள் கடந்தும் அவனது கண்கள் ஒளியை உணருமா? கேட்பதற்கு ஏதோ அறிவியல் புனைகதைத் திரைப்படம் போலத் தோன்றினாலும், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு புதிய உண்மை தற்போது ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. மனிதன் இறந்து 10 மணி நேரம் கடந்த பிறகும், அவனது கண்களில் உள்ள விழித்திரை வெளிச்சத்திற்கு எதிர்வினையாற்ற முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதித்துக் காட்டியுள்ளனர்.

மனித உடலின் இரத்த ஓட்டம் நின்றவுடன் கண்களின் செயல்பாடும் நின்றுவிடுவது வழக்கம். ஆனால், ‘சென்டர் ஃபார் ஜெனோமிக் ரெகுலேஷன்’ அமைப்பைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். அவர்கள் ஆய்வகத்தில் மனித உடலின் இரத்த ஓட்டத்தைப் போன்றே செயல்படக்கூடிய ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம், தானமாகப் பெறப்பட்ட கண்களின் விழித்திரைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களைச் செலுத்தினர். இதன் விளைவாக, மரணம் அடைந்து 10 மணி நேரத்திற்குப் பிறகும், அந்த விழித்திரை ஒளியின் பிரகாசத்திற்குத் துடிப்புடன் பதிலளிக்கத் தொடங்கியது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், இறந்த ஒரு மனிதன் மீண்டும் பார்க்கத் தொடங்குவான் என்று அர்த்தமல்ல என்பதை விஞ்ஞானிகள் தெளிவாக விளக்கியுள்ளனர். இந்த விழித்திரையானது உடலுக்கு வெளியே, ஒரு இயந்திரத்தின் துணையோடு மட்டுமே தற்காலிகமாகச் செயல்பட வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண் மூளையோடு இணைக்கப்படாததால், இறந்த நபரால் எதையும் உணர்ந்து பார்க்க முடியாது. இது செல்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் ஒரு அறிவியல் சோதனை மட்டுமே ஆகும்.

இறந்தவருக்குப் பார்வை கிடைக்காது என்றாலும், விழித்திரையை 24 மணி நேரம் வரை பாதுகாக்கும் இந்தத் தொழில்நுட்பம் பார்வையற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. இதன் மூலம் விலங்குகளுக்குப் பதிலாக நேரடியாக மனித விழித்திரையிலேயே கண் நோய்களுக்கான புதிய மருந்துகளைச் சோதிக்க முடியும். குறிப்பாக, முதுமையால் ஏற்படும் பார்வை மங்கல்  மற்றும் நீரிழிவு நோயால்  கண்கள் பாதிக்கப்படுதல் போன்ற தீவிரப் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.