பொது இடங்களில் மக்களின் நடத்தை மற்றும் குடிமைத் தார்மீக ஒழுக்கம் ஆகியவை குறித்து அவ்வப்போது இணையத்தில் விவாதங்கள் எழுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வியட்நாம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நாகரிகக் குறியீடுகள் மற்றும் பொது மக்கள் நடத்தை குறித்த ஒரு புதிய விவாதத்தை நெட்டிசன்களிடையே கிளப்பியுள்ளது.
தென் கொரியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியட்நாம் விமான நிலையத்தின் காட்சிகளை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அவர் தென் கொரியா செல்வதற்கான விமானத்திற்காகக் காத்திருந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளார். அதில், ஜப்பானிய, கொரிய மற்றும் வியட்நாமிய பயணிகள் பலர் விமான நிலையத்தின் தரைப்பகுதியில் அமர்ந்திருப்பதும், சிலர் அங்கேயே உணவருந்துவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த அந்த நபர், பொது இடங்களில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோன்று ஒரு இந்தியப் பயணி விமான நிலையத்தின் தரையில் அமர்ந்திருந்தாலோ அல்லது உணவருந்தினாலோ, இணையவாசிகள் உடனே அவரிடம் ‘சிவிக் சென்ஸ்’ இல்லை என்று கூறி கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்று அவர் வாதிட்டுள்ளார். விமான நிலையத்தில் அமர இடம் கிடைக்காத போதோ அல்லது பசியாக இருக்கும் போதோ தரையில் அமர்வது தவறில்லை என்றும், அதை வைத்து ஒருவரின் பொது ஒழுக்கத்தை மதிப்பிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைத்தளப் பயனர்கள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களது கருத்துக்களை மோதி வருகின்றனர். ஒரு தரப்பினர், “இந்தியர்கள் தங்களின் சொந்த நாட்டு மக்களை விமர்சிப்பதில் தான் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள்” என்று கூறி வீடியோ வெளியிட்டவரின் கருத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, “இங்குப் பிரச்சினை தரையில் அமர்வது அல்ல; வீடியோவில் இருக்கும் வெளிநாட்டு பயணிகள் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் பல நேரங்களில் சத்தமாகப் பேசுவது, குப்பைகளைத் தூக்கி எறிவது போன்ற செயல்களால் தான் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்” என்று தங்களின் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram
