சென்னை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இங்குள்ள ஒரு திரையரங்கில் அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒருகலாச்சார அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அவரது சுவாரசியமான அனுபவ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தென்கொரியாவைச் சேர்ந்த வ்லாகரான ஜங் ஏ அண்மையில் தனது இரு மகன்களுடன் சென்னையில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார். ஆரம்பத்தில் டிக்கெட் கவுண்டர், பெரிய சினிமா போஸ்டர்கள், பாப்கார்ன் வாசனை என அனைத்தும் அவரது சொந்த நாட்டைப் போலவே சாதாரணமாக இருந்ததால், நுழைவாயில் பாதுகாப்புச் சோதனையைத் தவிர பெரிய வித்தியாசம் எதையும் அவர் உணரவில்லை. ஆனால், படத்தின் இடைவேளையின் போதுதான் அந்த சுவாரசியமான திருப்பம் அரங்கேறியது.

படம் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென திரை முற்றிலும் இருண்டு, தியேட்டரின் அனைத்து விளக்குகளும் எரிந்தன. அதுமட்டுமன்றி, திரையரங்கில் இருந்த மக்கள் அனைவரும் திடீரென தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து வெளியே ஓடத் தொடங்கினர். தென் கொரியாவில் உள்ள திரையரங்குகளில் இது போன்ற ஒரு சூழல் எப்போதும் நடப்பதில்லை என்பதால், இதைப் பார்த்த ஜங் ஏ பயத்தில் உறைந்துபோனார். தியேட்டரில் ஏதோ பெரிய விபத்து அல்லது அவசரநிலை ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து அவர் பதற்றமடைந்தார். ஆனால், சில நிமிடங்களிலேயே அங்குள்ள சூழ்நிலையை வைத்து அது ஆபத்து இல்லை, இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான ‘இடைவேளை’ என்பதைப் புரிந்து கொண்டு, தனது பயம் நீங்கி விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Jung ae Um🇰🇷 living in India🇮🇳 (@wonny_brothers)

இந்த சுவாரசியமான சம்பவத்திற்குப் பிறகு, தனது வீடியோவில் தென் கொரியா மற்றும் இந்தியத் திரையரங்குகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி ஜங் ஏ விளக்கியுள்ளார். தென்கொரியாவில் திரைப்படம் எவ்வளவு நீளமாக இருந்தாலும், எந்தவொரு இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து திரையிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு படம் பார்ப்பவர்களில் யாருக்காவது கழிவறைக்கோ அல்லது தின்பண்டங்கள் வாங்கவோ செல்ல வேண்டுமென்றால், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக எழுந்து சென்று வருவார்கள். அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் திரைப்படத்தின் நடுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி வழங்கப்பட்டு, பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும், தின்பண்டங்கள் வாங்கவும் வழிவகை செய்யப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஆரம்பத்தில் இது தனக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இப்போது இந்த இந்திய இடைவேளை முறை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக அவர் பாராட்டியுள்ளார்.

இணையத்தில் ஜங் ஏ பகிர்ந்துள்ள இந்த வீடியோ வெளியானது முதல், நெட்டிசன்களிடையே ஒரு சுவாரசியமான விவாதம் கிளம்பியுள்ளது. அதில் ஒரு தரப்பினர், சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் இந்தியத் திரைப்படங்களுக்கு நடுவே இத்தகைய இடைவேளை மிகவும் அவசியமானது என்றும், இது பார்வையாளர்கள் சற்று ஓய்வெடுக்க உதவும் என்றும் ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, இது முழுக்க முழுக்க தியேட்டர்களின் ஒரு வியாபார உத்தி என்று குற்றம் சாட்டுகின்றனர். தியேட்டர்களில் விற்கப்படும் விலை உயர்ந்த பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவே இந்த இடைவேளை முறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர். எது எப்படியோ, இந்த இரு நாட்டு கலாச்சார விவாதம் தற்பொழுது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.