உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், பரிசோதனை மையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடத்தில், 15 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.

சிறுமி தனது உறவினருடன் சிகிச்சைக்காக அந்த மையத்திற்குச் சென்றபோது, அவரது உறவினர் சந்தைக்குச் சென்ற இடைவெளியைப் பயன்படுத்தி, லேப் உரிமையாளர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, சுயநினைவற்ற நிலையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி, கதறி அழுதபோது அவரது வாயில் துணியைத் திணித்து, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான் அந்த கொடூரக் குற்றவாளி. சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தைக் கூறியதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இந்தச் செயலில் ஈடுபட்ட இந்திரபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த அந்த லேப், உடனடியாகச் சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.