மாதக் கணக்கில் திட்டமிட்டு, சிறுகச் சிறுகச் சேர்த்த உழைப்பின் பணத்தைக் கொண்டு குடும்பத்துடன் நிம்மதியாக ஒரு சுற்றுலா சென்ற இடத்தில், உங்களது வேலையே பறிபோனால் எப்படி இருக்கும்? கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் இத்தகைய ஒரு சம்பவம் கார்ப்பரேட் துறையின் கொடூர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஹவாய் தீவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நபருக்கு, அங்கு சென்ற முதல் நாளே வேலையிலிருந்து நீக்கப்படுவதாக வந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதிரவைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் நீச்சல் உடையில் ஒரு சுற்றுலா விடுதியில் உலா வந்தபடியே தனது வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார். அவரும் அவரது கணவரும் கார்ப்பரேட் துறையில் முழுநேர ஊழியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஹவாய் சுற்றுலா பயணத்திற்காக இருவரும் பல மாதங்களாகப் பணத்தைச் சேமித்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு சென்றடைந்த முதல் நாள் காலை 9 மணியளவில், கணவரின் மேலாளரிடமிருந்து ஒரு அவசர போன் கால் வந்துள்ளது. அதில், உடனடியாக ‘மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்’ வீடியோ காலில் இணையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Her husband is fired in the middle of a vacation. pic.twitter.com/iXuz5uaYOa
— Dr.L (@DrAlmarielao) July 16, 2026
கணவர் ஒரு வாரம் விடுமுறையில் ஹவாய் தீவில் இருக்கிறார் என்பது அந்த நிறுவனத்திற்கு நன்றாகவே தெரிந்திருந்தும், இந்த வீடியோ கால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணவர் அந்த வீடியோ காலில் இணைந்த சில நிமிடங்களிலேயே, அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் கண்ணீருடன் கூறுகையில், “இந்தச் செய்தியை திங்கள் கிழமை வரை தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா? நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லையா? இந்த இடி போன்ற செய்திக்கு பிறகு நாங்கள் எப்படி விடுமுறையைக் கொண்டாட முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் இந்த இரக்கமற்ற செயலை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். ஒரு பயனர், “இதனால்தான் நான் விடுமுறையில் இருக்கும் போது அலுவலகப் போனையோ, மின்னஞ்சலையோ பார்ப்பதில்லை” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “நிறுவனங்கள் உங்களை ஒரு மனிதராகவே மதிக்காத போது, மாற்று வேலை வாய்ப்பு கிடைக்கும் போது தயங்காமல் நிறுவனத்தை விட்டு விலகுங்கள்” என்று கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு எதிராகத் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
