காப்பீட்டுப் பணம் மற்றும் அரசு இழப்பீட்டுத் தொகைக்காக, உத்தரப் பிரதேச பெண் காவலர் மற்றும் அவரது இரண்டு வயதுக் குழந்தையை காரோடு எரித்துக் கொன்ற கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து என நாடகமாடிய கணவரின் உடலில் ஒரு சிறு காயம் கூட இல்லாதது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தியில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் லதா (25). கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இரவு, லதா மற்றும் அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் ராம்பூர் அருகே கார் தீப்பிடித்ததில் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த கணவர் தான் சிங் (35) மற்றும் அவரது சகோதரர் ரவி சிங் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். ஒரு டேங்கர் லாரி மோதியதால் கார் தீப்பிடித்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு ஆரம்பத்திலேயே சில சந்தேகங்கள் எழுந்தன, கார் கொழுந்துவிட்டு எரிந்த நிலையிலும், உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற முயன்றதாகக் கூறிய கணவர் தான் சிங்கின் உடலில் ஒரு சிறு தீக்காயமோ அல்லது தலைமுடியில் கருகிய தடயமோ இல்லை. அவர் தனது மனைவி மற்றும் குழந்தையைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக நின்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கார் வழக்கமான பாதையைத் தவிர்த்து, நீண்ட தூரப் பாதையில் பயணித்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
தொடர் விசாரணையில், தான் சிங் ஒப்புக்கொண்ட உண்மைகள் அதிகாரிகளையே அதிரவைத்துள்ளன. அதாவது லதாவிற்கு கிடைக்க வேண்டிய அரசு இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையான ரூ. 2.5 முதல் 3 கோடி வரையிலான பணத்தைப் பெறுவதற்காகவே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டது. சுற்றுலா செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று, வழியில் உணவகத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இருவரையும் சுயநினைவிழக்கச் செய்துள்ளனர்.
பின்னர் ஆள்நடமாட்டமற்ற இடத்தில் காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளனர். தீ தாளாமல் லதா கண்விழித்து வெளியே வர முயன்றபோது, அவரது மைத்துனர் ரவி அவரை மீண்டும் தீக்குள் தள்ளிவிட்டுள்ளார். உயிருக்குப் போராடிய லதாவை மீட்ட கிராம மக்கள் ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால், உதவிக்கு வருவது போல நடித்த தான் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள், லதாவைத் தங்கள் காரில் ஏற்றிச் சென்று, வழியிலேயே சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
தான் சிங்கின் முதல் மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததும், அதற்கும் அவர் காப்பீட்டுப் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. அந்த மரணத்திலும் மர்மம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், மூன்றாவது திருமணம் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனது மகனை ஏன் கொன்றாய் என்ற கேள்விக்கு, “அவன் உயிரோடு இருந்தால் பணம் பிரிந்து போகும், எனக்குக் குறைவான தொகையே கிடைக்கும்” என்று அவர் அளித்த பதில் போலீசாரையே உறைய வைத்துள்ளது. மேலும் தற்போது தான் சிங், அவரது சகோதரர் ரவி மற்றும் உடந்தையாக இருந்த மூன்று கூட்டாளிகள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
