“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் விஜய்” என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்த நிலையில், “நேரு முதலில் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்” என தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அவர் கூறியதாவது:

“தவெக கூட்டத்தில் பேசிய விஜய், ‘அழுத்தத்திற்கு நான் பயப்பட மாட்டேன்’ என வீர வசனம் பேசியுள்ளார். ஆனால், இதே விஜய் கடந்த காலத்தில் ஜெயலலிதாவிடம் எப்படி கைகட்டி நின்றார் என்பதை மக்கள் அறிவார்கள். தனது படம் வெளியாகாமல் தடைபட்டபோது, ‘உங்களுக்கு நாங்கள் எதிரி இல்லை’ எனக் கூறித் தந்தையுடன் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து அழுத்தத்திற்குப் பணிந்தவர்தான் இந்த விஜய். அவர்தான் இன்று வீரம் பேசுகிறார்” என்றார்.

அமைச்சர் நேருவின் இந்தப் பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் தனது ‘எக்ஸ்’பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“எங்கள் தலைவரைப் பற்றிக் குறைகூறும் அமைச்சர் நேரு, முதலில் தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாதவர் எங்கள் தலைவர். ஒரு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும்போது, அதிகாரத்திலுள்ள முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவது எப்படித் தவறாகும்? அது ஒன்றும் பாதகம் இல்லையே.

தவெக பற்றி கவலைப்படும் நேரு, தனது துறையில் ரூ. 2000 கோடிக்கு மேல் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை (ED) நோட்டிஸ் அனுப்பியபோது எங்கு ஓடி ஒளிந்தார்? கிழிவது ஒரு இடம், தைப்பது ஒரு இடமா? உங்கள் கிழிசலை முதலில் தையுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் மற்றும் திமுக அமைச்சருக்கு இடையிலான இந்த நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.