பிரிந்து கிடக்கும் அதிமுக-வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய தலையாய கோரிக்கையாக உள்ளது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப, பிரிந்து கிடக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுதான் மக்களுடையவும், தொண்டர்களுடையவும் விருப்பம். எனது தலையாய கோரிக்கையும் அதுதான். இதனைத் தொடர்ந்து, “அதிமுக-வில் நீங்கள் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புள்ளதா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது” என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.

கூட்டணியில் உங்களை இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் உங்களிடம் பேசினாரா? என்ற கேள்விக்கு, “இதுவரை டி.டி.வி.தினகரன் உட்பட யாரும் என்னை அழைக்கவில்லை, இதுகுறித்து யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று அவர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில், “அதிமுக ஒரு ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் கூறியிருப்பது குறித்தும், அதற்கு அதிமுகவினர் அளிக்கும் எதிர்வினைகள் குறித்தும்” செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.