கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்திற்கான யூகங்கள் வலுத்து வரும் நிலையில், பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாகத் தொண்டர்கள் முழக்கமிட்டதால் முதல்வர் சித்தராமையா ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகச் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதன்படி, ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவகுமாரும் முதல்வராக இருப்பார்கள் எனக் கூறப்பட்டது.
தற்போது சித்தராமையா தலைமையிலான அரசின் முதல் இரண்டரை ஆண்டு காலம் (நவம்பர் 2025-ல்) நிறைவடைந்துள்ளது. இதனால் முதல்வர் மாற்றம் குறித்த விவாதங்கள் அக்கட்சிக்குள் புகைந்து கொண்டே இருக்கின்றன. எனினும், சித்தராமையாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடித்து வருகிறார்.
The Congress crowd no longer seems enthused by Siddaramaiah. Instead, they’re bursting with excitement to welcome swayamsevak D. K. Shivakumar, chanting “DK! DK! DK!” with visible joy.
Is it because Siddaramaiah was never an original Congressman and joined Congress from JD(S)… https://t.co/MiqAp69wWV pic.twitter.com/LBynS4JH7E
— Kiran Aradhya (@KiranAradhyaadv) January 27, 2026
இந்தச் சூழலில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா கலந்துகொண்டார். அவர் உரையாற்றுவதற்காக மேடையில் எழுந்தபோது, அங்கிருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென “டி.கே., டி.கே.” என துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக விண்ணதிர முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் இந்தத் திடீர் முழக்கத்தால் மேடையிலேயே சற்று நேரம் பேசாமல் நின்ற சித்தராமையா, முகம் கடுகடுப்பானார். தொண்டர்கள் முழக்கத்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த அவர், கையை அசைத்து அவர்களைக் கண்டிப்புடன் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தலையிட்டு, “அமைதி காக்க வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என இளைஞர் காங்கிரஸாரை எச்சரித்தனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளன.
