மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் சம்பளத்தில் கிடைத்த மதிப்புமிக்க வேலையை, அங்கு நிலவிய மோசமான பணிச்சூழல் காரணமாக 25 வயது இளம் பொறியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருக்ஷேத்ரா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சௌரவ் மிட்டல் (25) என்ற வாலிபர், தனது 22-ஆவது வயதிலேயே பிபிசிஎல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். சமூகம் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த வேலை பெரும் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டது. ஆனால், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ஒரு கிடங்கில் அவருக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதுதான் கசப்பான உண்மைகள் தெரியவந்துள்ளன.
View this post on Instagram
அங்கு முறையான கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோ அல்லது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லை. இதுகுறித்து அவர் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட அவர் தனது அறைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தனது பணி அனுபவம் குறித்து சௌரவ் மிட்டல் கூறுகையில், “அங்கு பணிச்சூழல் மிகவும் பின்தங்கியதாகவும், மன உளைச்சல் தருவதாகவும் இருந்தது. உயர் அதிகாரிகள் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமின்றி, தங்களது சொந்த வேலைகளான ஏர்போர்ட்டிற்குச் சென்று பிக்-அப் செய்வது, ஹோட்டல் புக் செய்வது போன்ற தனிப்பட்ட வேலைகளையும் என்னைத் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள்.
முறையான விடுமுறை இல்லை, வார இறுதி நாட்களிலும், நள்ளிரவிலும் கூட அலுவலக அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். பதவி உயர்வுகளும், சம்பள உயர்வுகளும் மிக மந்தமாகவே இருந்தன. என் வாழ்நாள் முழுவதையும் இப்படியே கழிப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவன வேலை என்பதால் சௌரவ்வின் தந்தை இந்த ராஜினாமாவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மகன் எதிர்கொண்ட கடுமையான மன அழுத்தத்தைக் கண்டா அவரது தாய், வேலையை விடும்படி மகனுக்கு ஆதரவாக நின்றுள்ளார். தற்போது அந்த வேலையை உதறியுள்ள சௌரவ் மிட்டல், குருகிராமில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிஏ (MBA) படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும், தனது அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் இளம் தலைமுறையினருக்குப் பகிர்ந்து வருகிறார்.
அவரது இந்தத் துணிச்சலான முடிவிற்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். “நீங்க எடுத்தது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு, உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்” என்றும், “16 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதேபோன்ற சூழலைக் கடந்து வந்தவன்தான், உங்கள் முடிவை வரவேற்கிறேன்” என்றும் சௌரவ் மிட்டலுக்கு ஆதரவுக் குரல்கள் குவிந்து வருகின்றன.
