டெல்லியில் கேப் பயணம் முடிந்த பிறகு வெறும் ஒரு ரூபாய் சில்லறைக்காக பெண் பயணிக்கும் கேப் டிரைவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூ.199 கட்டணமாக இருந்த நிலையில், பெண் பயணி ரூ.200 நோட்டை டிரைவரிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1-ஐ திருப்பிக் கேட்டபோதுதான் பிரச்சினை தொடங்கியுள்ளது. ஒரு ரூபாய்க்காக இருவரும் விடாப்பிடியாக வாக்குவாதம் செய்த சம்பவம் இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது.

பயணம் முடிந்ததும் டிரைவரிடம் ரூ.1 சில்லறையை பெண் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் சில்லறை இல்லை என்று டிரைவர் தெரிவித்துள்ளார். இதனால் “கட்டணம் ரூ.199 என்றால் ரூ.200 ஏன் கொடுக்க வேண்டும்?” என்று பெண் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. எப்படியாவது தனது ஒரு ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதற்கு டிரைவரும், “சில்லறை இல்லாத நிலையில் நான் எங்கிருந்து கொண்டு வருவது?” என்று பதிலளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepak Kumar (@ncr_cab_vloging)

ஒரு ரூபாய் என்பதால் விட்டுவிடுவார்கள் என்று நினைத்த நிலையில், இருவருமே தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. பெண் தனது ரூ.1-ஐ விடமாட்டேன் என்று கூற, டிரைவரும் தன்னிடம் சில்லறை இல்லை என்று தெரிவித்ததால் வாக்குவாதம் நீண்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் ஒரு ரூபாய்க்கு பதிலாக சிறிய பொருளை கொடுத்து கணக்கை முடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு ஒரு ரூபாய் விவகாரம் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், நெட்டிசன்கள் தங்களது பாணியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பெண்ணின் விடாப்பிடியான செயலையும், சிலர் டிரைவரின் நிலைமையையும் நகைச்சுவையாக விமர்சித்துள்ளனர். “ஒரு ரூபாய்க்காக இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா?” என்று பலரும் கேட்டு வருகின்றனர். சிறிய சில்லறை பிரச்சினை எப்படி சமூக வலைதளங்களில் பெரிய வைரல் சம்பவமாக மாறியது என்பதற்கு இந்த வீடியோ மற்றொரு உதாரணமாகியுள்ளது.