டெல்லியில் லஸ்ஸி விற்பனை செய்து வரும் ஒருவரின் வாழ்க்கைப் போராட்டக் கதை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பத்தின் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்தது. வெறும் 11 வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கிய அவர், குடும்பத்தின் தேவைகளுக்காக சிறுவயதிலேயே கடுமையாக உழைத்துள்ளார். பள்ளிக்குச் சென்று விளையாட வேண்டிய வயதில் வாழ்க்கையுடன் போராட வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு வெறும் ரூ.250 மட்டுமே சம்பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வருமானம் குறைவாக இருந்தாலும் எந்த வேலையையும் சிறியது என்று நினைக்காமல் தொடர்ந்து உழைத்துள்ளார். காலப்போக்கில் அவரது வருமானம் அதிகரித்தது. தற்போது டெல்லியில் லஸ்ஸி விற்பனை செய்து வரும் அவர், மாதம் சுமார் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Upen Verma (@upenverma)

வருமானம் உயர்ந்த பிறகும் குடும்பத்தை அவர் மறக்கவில்லை. தனது சகோதரர், சகோதரிகளின் திருமணங்களை நடத்தி வைத்ததுடன், குடும்பத்தின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு இருந்த மிகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். பல ஆண்டுகள் உழைத்து பணத்தை சேமித்த அவர், உத்தரப் பிரதேசத்தில் தனது சொந்தமாக இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார். அந்த வீடு அவருக்கு வெறும் கட்டிடம் மட்டுமல்ல; பல ஆண்டுகளாக அவர் சந்தித்த போராட்டத்துக்கான வெற்றியின் அடையாளமாக மாறியுள்ளது.

ஒருவேளை கடவுளிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, தனது தந்தையை மீண்டும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பணமும் வசதிகளும் கிடைத்தாலும் தந்தையின் இழப்பை எந்த ஒன்றாலும் ஈடு செய்ய முடியவில்லை என்று அவரது பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைப்பை கைவிடக்கூடாது என்பதே அவரது கதையின் முக்கிய செய்தியாக உள்ளது. சிறிய வேலையாக இருந்தாலும் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு அவரது பயணம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.