சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன், தனது நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா பெற விண்ணப்பித்தார். ஆனால், ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா (வயது 29) மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது 37) ஆகியோர், இதற்காக 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். பின்னர், பேரம் பேசி 10,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கூறினர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, செப்டம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் குமரேசன் 10,000 ரூபாய் லஞ்சத்தை ஜீவிதா மற்றும் கண்ணதாசனிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.