ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம், தற்போது ஒரு சுவாரஸ்யமான காரணத்திற்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் மிக முக்கியமான சண்டைக் காட்சியொன்றில், தவறுதலாகப் பதிவான கேமராமேனின் பிம்பம் ரசிகர்களின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ளது.

படத்தின் நாயகன் ரன்வீர் சிங் மற்றும் அவரது நண்பர் பிந்தா ஆகியோருக்கு இடையே ஒரு தீவிரமான சண்டைக் காட்சி நடைபெறுகிறது. விறுவிறுப்பான அந்தத் தருணத்தில், அங்கிருந்த ஒரு கண்ணாடியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த கேமராமேனின் பிம்பம் ஒரு நொடி தோன்றி மறைகிறது. மிகவும் நுணுக்கமாகக் கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய இந்தத் தவறை, ரசிகர்கள் கண்டுபிடித்து அதன் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பொதுவாக ஒரு படத்தின் தரம் மற்றும் நுணுக்கமான விஷயங்களைப் பாராட்டுவதற்கு “பீக் டீடைலிங்” (Peak Detailing) என்ற வார்த்தையை ரசிகர்கள் பயன்படுத்துவர். ஆனால், இந்தத் தவறைச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், படக்குழுவினரை விமர்சிப்பதற்குப் பதிலாக, “இதுதான் உண்மையான டீடைலிங்” என நகைச்சுவையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

இத்தகைய சிறு பிழைகள் படத்தின் வசூலையோ அல்லது புகழையோ பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இந்தத் தவறைக் கண்டுபிடிப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியையும் இமைக்காமல் உற்று நோக்கி வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. மேலும் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அதன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக ஏற்கனவே பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், இந்த ‘கேமராமேன்’ விவகாரம் படத்திற்கு ஒரு கூடுதல் விளம்பரமாகவே  அமைந்துள்ளது என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.