சமீபகாலமாக தெரு நாய்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் ஆங்காங்கே கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதநேயத்திற்கும் விலங்குகளின் விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ‘ஷேரு பாய்’ என்ற தெரு நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னார்வலர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பெண் தனது வேலை முடிந்து தனியாக வீடு திரும்புகிறார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ‘ஷேரு பாய்’ என்று அழைக்கப்படும் தெரு நாய், எவ்வித பயிற்சியும் இன்றி தானாகவே அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பாக அவர் வீடு வரை பின் தொடர்ந்து செல்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக தான் வேலை முடிந்து தாமதமாக வரும்போது, ஷேரு தமக்காகக் காத்திருந்து வீடு வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நள்ளிரவு நிசப்தத்தில் தான் பாதுகாப்பாக இருப்பதை இந்த நாய் உறுதி செய்வதாக அவர் கூறுகிறார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “நிபந்தனையற்ற அன்பிற்கு இதுவே சான்று” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “நிஜமான ‘ஜென்டில்மேன்’ இந்த ஷேரு தான்” என மற்றொருவர் புகழாரம் சூட்டியுள்ளார். அந்தப் பெண்ணிடம், ஷேருவின் இந்த தன்னலமற்ற சேவைக்காக அதற்கு உணவும் தண்ணீரும் வழங்கி அன்பைப் பகிருமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விலங்கு நல ஆர்வலர்களின் கருத்துப்படி, தெரு நாய்களை நாம் அன்போடும் மரியாதையோடும் நடத்தினால், அவை வெறும் விலங்குகளாக இல்லாமல், நம் குடியிருப்புப் பகுதிகளின் சிறந்த பாதுகாப்பாளர்களாகவும் உண்மையான நண்பர்களாகவும் மாறும் என்பதற்கு ‘ஷேரு பாய்’ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான்.
