பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துதான் கட்சிப் பதவியையும் ‘மாம்பழம்’ சின்னத்தையும் பெற்றுள்ளார் என அவர் தரப்பிலிருந்தே கிளம்பியுள்ள புகார் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது.

​தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று (மார்ச் 16) இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. “தவறான தகவல்கள் மூலம் சின்னம் கைபற்றப்பட்டுள்ளது” என்கிற குற்றச்சாட்டு உண்மையாகும்பட்சத்தில், கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், பாமக-வின் உயர்மட்டத் தலைவர்களிடையே வெடித்துள்ள இந்த ‘ஆவணப் போர்’ அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.