பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, தன்னைத் துரோகி என்று கூறும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனசாட்சி இல்லாதவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணியின் நடவடிக்கைகளால் பாமக பல பிரச்சனைகளைச் சந்தித்ததாக வருத்தம் தெரிவித்தார். மேலும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உட்கார்ந்து பேசினால்தான் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும், இருவரும் பிரிந்திருந்தால் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் பாமகவைத் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்கியவர் ராமதாஸ்தான் என்றும், அன்புமணியின் செயல்பாடுகளைப் பார்த்து ராமதாஸ் கண்ணீர் விடுகிறார் என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார். ராமதாஸுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று அன்புமணி பேசியது மனசாட்சிக்கு எதிரானது என்று ஜி.கே. மணி அழுத்தமாகக் கூறினார். மனதில் கூட துரோகம் நினைக்காத தன்னை அன்புமணி துரோகி என்று பேசுவது மிகவும் வேதனையாக இருப்பதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கியதே ராமதாஸ்தான் என்றும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தான் பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். அன்புமணியின் ஆதரவாளர்கள் பாமக-வில் பிளவை ஏற்படுத்தியதாகவும் ஜி.கே. மணி குற்றம் சாட்டினார். இறுதியாக, “நாங்கள் துரோகிகள் என்றால் விலகிக் கொள்கிறோம்; நீங்கள் (ராமதாஸும், அன்புமணியும்) ஒன்று சேருங்கள்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
