ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்து நாடு கடத்தும் திட்டம் ஏதும் அமெரிக்காவிடம் இல்லை என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா எடுத்து வரும் அமைதி முயற்சிகளுக்கு ரஷியா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் போர் நிறுத்தம் எட்டப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
சமீபத்தில் வெனிசுலா நாட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “ஒரு சர்வாதிகாரியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மதுரோவின் சம்பவமே சாட்சி. அமெரிக்கா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அதற்குத் தெரியும். விரைவில் ரஷிய அதிபர் புதினை கைது செய்து நாடு கடத்துவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: “ரஷியாவிற்குள் புகுந்து அதிபர் புதினை நாடு கடத்தும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. ரஷியாவுடன் அமெரிக்கா நல்லுறவையே கொண்டுள்ளது. அதே சமயம், தற்போதைய சூழல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் நடந்து வந்த 8 போர்களை என்னால் நிறுத்த முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக உக்ரைன் – ரஷியா போரை மட்டும் இன்னும் நிறுத்த முடியவில்லை.” என்றார்.
மேலும் போரை நிறுத்த டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தங்களை அதிபர் புதின் ஏதோ ஒரு காரணத்தைக் கூறித் தொடர்ந்து நிராகரித்து வருவதே இந்த இழுபறிக்குக் காரணம் என வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
