ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயிலும் மற்ற அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும். இதனிடையே இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அணியில் முகமது சிராஜ் இடம் பெறவில்லை.
மேலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றிருந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து கூறுகையில், எனது கருத்துப்படி இந்திய அணியில் முகமது சிராஜ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
தற்போது இருக்கும் அணியில் ஒரு ஹாஃப் ஸ்பின்னர் இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரில் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு அவருடைய இடத்தில் முகமது சிராஜை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஜடேஜாவுக்கு விளையாட குறைந்த வாய்ப்புகளே உள்ளது. ஆனால் முகமது சிராஜ் அணிக்கு அதிக மதிப்பை கொண்டு வருவார்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி அவர் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிகம் விளையாடும் ஒருவரை அணியில் சேர்த்திருக்கலாம். சிராஜ் அந்த இடத்தில் இருந்தார் என்றால் அணிக்காக அதிகம் பங்காற்றுவார்” என்று கூறியுள்ளார்.
