இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், நட்சத்திர வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயதே ஆன வைபவ், தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் இவரது வயது குறித்து சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். “அவருக்கு 14, 15 அல்லது 16 வயதாக இருந்தால் எனக்கு என்ன? அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. மைதானத்தில் அவர் பேட்டிங் செய்யும் விதத்தையும், தன்னை விட இரண்டு மடங்கு அதிக வயதுடைய அனுபவமிக்க பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொள்ளும் தைரியத்தையும் தான் நான் பார்க்கிறேன்” என்று சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இளம் வீரர்களின் திறமையை அங்கீகரிப்பதில் வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறியுள்ள ரவி சாஸ்திரி, பிசிசிஐ மற்றும் இந்திய தேர்வு குழுவிற்கு ஒரு முக்கியமான கோரிக்கையையும் வைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்றும், அடுத்ததாக வரவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இளம் வீரர்களை சர்வதேச அளவில் கொண்டு வர டி20 வடிவமே மிகச் சரியானது என்று குறிப்பிட்ட சாஸ்திரி, வைபவ்வின் இந்த துடிப்பான ஆட்டம் தற்போதைய இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என்றும், பிசிசிஐ இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை துணிச்சலுடன் எடுக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
