மேற்கு ஆஸ்திரேலியாவின் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியதால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பார்ப்பதற்கு உலகம் அழியப்போகும் காலம் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்த வானம் ஏற்படுத்திய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த மார்ச் 27 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் ஷார்க் பே (Shark Bay) மற்றும் பில்பாரா (Pilbara) ஆகிய பகுதிகளில் இந்த விசித்திரமான நிகழ்வு பதிவானது. அந்தப் பகுதியின் அடிவானம் முழுவதும் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால், ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஒருவித திகிலூட்டும் சிவப்பு ஒளியில் மூழ்கியது. இதனைப் பார்த்த பலரும் இது காலநிலை மாற்றத்தின் விளைவா அல்லது ஏதேனும் அமானுஷ்ய நிகழ்வா என சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்த மர்மமான நிற மாற்றத்திற்குப் பின்னால் ஒரு வலுவான அறிவியல் காரணம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆஸ்திரேலியக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் ‘நரேல்’ (Cyclone Narelle) என்ற சக்திவாய்ந்த சூறாவளியே இதற்குக் காரணம். இந்தச் சூறாவளி மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்றைக் கொண்டு வந்தது.

 

இந்த அதிவேகக் காற்று, ஆஸ்திரேலியாவின் வறண்ட உள்பகுதிகளில் உள்ள மண்ணிலிருந்து பெருமளவிலான இரும்புச் சத்து நிறைந்த தூசிகளை வளிமண்டலத்திற்குத் தூக்கிச் சென்றது. ஆஸ்திரேலியாவின் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒளிச் சிதறல் (Light Scattering) என்ற இயற்பியல் விதியின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. சூரிய ஒளி தூசு நிறைந்த வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவும்போது, காற்றில் உள்ள பெரிய தூசுத் துகள்கள் நீலம் மற்றும் பச்சை போன்ற குறைந்த அலைநீளம் கொண்ட நிறங்களைச் சிதறடிக்கின்றன. ஆனால், சிவப்பு போன்ற நீண்ட அலைநீளம் கொண்ட நிறங்கள் தடையின்றி ஊடுருவுகின்றன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரும்பு ஆக்சைடு துகள்கள் ஒரு இயற்கை ‘ஃபில்டர்’ போலச் செயல்பட்டு, சிவப்பு நிறத்தை மட்டும் பிரகாசமாகப் பிரதிபலித்தன. இதனால் வானம் செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அளித்தது. இது போன்ற நிகழ்வுகள் அரிதானவை என்றாலும், வறண்ட நிலப்பரப்பில் கடும் சூறாவளி வீசும்போது முற்றிலும் இயற்கையானது என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.