மேற்குவங்கம் பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியாஜித் கோஷ் (வயது 22) என்ற இளம் கிரிக்கெட் வீரர், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர் போல்பூரைச் சேர்ந்தவர். உடற்பயிற்சி நேரத்தில் அதிக வியர்வையுடன் நிலைதடுமாறிய அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

பிரியாஜித், சிறுவயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வளர்ந்து வந்தவர். வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) நடத்தும் U-16 மாவட்ட போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளராக இருந்த இவர், ஒருநாள் ரஞ்சி டிராபி மற்றும் தேசிய அணிக்குள் இணைவதையே கனவாகக் கொண்டிருந்தார். அவரது திறமைக்கு CAB விருதும் வழங்கியது. அந்த நினைவு பதக்கம் அவரது அறையில் முக்கியமான இடம் பெற்றிருந்தது.

விராட் கோலியைப் போல தேசிய வீரராக மாறவேண்டும் என்ற கனவுடன் உழைத்துவரும் நேரத்தில் நிகழ்ந்த திடீர் மரணம், கிரிக்கெட் சமூகத்தையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.