மதுரையில் ஒரு இளம் கல்லூரி மாணவியின் உயிர், தவறான ஒரு யூடியூப் வீடியோவால் பறிபோயிருக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், யூடியூப்பில் வந்த வீடியோவை நம்பி ‘வெங்காரம்’ (Borax) என்ற வேதிப்பொருளை மாணவி கலையரசி சாப்பிட்டுள்ளார். குங்குமம் தயாரிக்கவும், உலோகங்களைச் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படும் இந்த நச்சுத்தன்மை கொண்ட பொருளைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அவருக்குக் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி கலையரசி உயிரிழந்தார். ஒரு சின்னத் தவறான தகவல், ஒரு குடும்பத்தின் விளக்கை அணைத்துவிட்டது. “யூடியூப்பில் பார்ப்பது எல்லாம் உண்மை அல்ல” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பாடம்! முறையான மருத்துவர் ஆலோசனை இல்லாமல், இப்படித் தெரியாத வேதிப்பொருட்களைச் சாப்பிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை இந்தச் சமூகம் எப்போதுதான் உணருமோ?