மதுரை மேலமாரட் வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இது தொடர்பாக அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இரவு, மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மேலமாரட் வீதி வணிகக் கட்டிடத்தின் 2-வது தளத்தில் இயங்கி வரும் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) உடல் கருகி உயிரிழந்தார். உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், கல்யாணி நம்பியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதாவது  எல்.ஐ.சி இழப்பீட்டுத் தொகை (Insurance Claim) வழங்குவதில் நடந்த பல லட்ச ரூபாய் முறைகேடு குறித்து கல்யாணி நம்பி விசாரணை நடத்தி வந்துள்ளார். இதில் சிக்கிய உதவி மேலாளர் ராமகிருஷ்ணன், உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க கல்யாணி நம்பியை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், கல்யாணி நம்பி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு, அதனை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து போல நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, தீ விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணனை இன்று (ஜனவரி 20) கைது செய்தனர். மேலும் அவரிடம் இந்த முறைகேட்டில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.