மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
அதிபர் டிரம்ப் உடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு ஆசிய நிலைமை குறித்து அதிபர் டிரம்ப் உடன் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. இப்பகுதியில் அமைதி திரும்புவதையும், பதற்றங்கள் தணிவதையும் இந்தியா ஆதரிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாகவும், தடையின்றியும் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் அவசியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இணைந்து செயல்பட நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேற்கு ஆசியப் போர் சூழலால் இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இறக்குமதி ஆதாரங்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்தியாவைப் பாதிக்காத வகையில் வலுவான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது,” என்றார் அவர்.
அதன்படிஇந்தியாவின் மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு (Strategic Petroleum Reserves) தற்போது 53 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. இது விரைவில் 65 லட்சம் டன்களாக உயர்த்தப்படவுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களைப் பெறுவதற்கு இந்தியா மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உள்நாட்டிலேயே கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுத் தேவை மற்றும் விவசாயத் தேவைகளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது.
மேலும் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்
