பாதுகாப்பான பயணத்திற்குப் பெயர்பெற்ற டெல்லி மெட்ரோ ரயிலின் மகளிர் பெட்டியில், நான்கு இளம்பெண்கள் சக பயணியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட அந்தப் பெண்களின் செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது சம்பவத்தன்று டெல்லி மெட்ரோவின் மகளிர் பெட்டியில் பயணம் செய்த நான்கு இளம்பெண்கள், சக பயணியருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உரத்த குரலில் கத்திக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும் இருந்துள்ளனர். இதனால் எரிச்சலடைந்த சக பயணியர், பொது இடத்தின் மாண்பைக் கருதி அமைதி காக்குமாறு அந்தப் பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், அமைதியாவதற்குப் பதிலாக அந்த இளம்பெண்கள் ஆக்ரோஷமாக மாறி, சக பெண் பயணியரை நோக்கி ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான வசவுச் சொற்களைப் பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது அதே பெட்டியில் இருந்த பெண் பயணி ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வீடியோவைப் பார்க்கும்போதே உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். ஆனால் நான் அந்தப் பெட்டிக்குள் இருந்தபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். அங்கு ஒரு மாற்றுத்திறனாளிப் பெண் அமர்ந்திருந்தார். அவர் அடுத்த நிலையத்தைப் பற்றி எங்களிடம் கேட்டார். ஆனால், இந்த இளம்பெண்கள் தேவையில்லாமல் கத்திக்கொண்டிருந்ததால் எங்களால் எதையும் கேட்க முடியவில்லை. சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டதற்கு, அவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் எங்களைத் திட்டி ஆக்ரோஷமாக நடந்துகொண்டனர்.


மேலும், மெட்ரோ ரயில் மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து ஊடகமாக இருப்பதாகவும், அங்கேயே இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால் தாங்கள் எங்கே செல்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் (DMRC) மற்றும் டெல்லி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகமோ அல்லது காவல்துறையோ இதுவரை அதிகாரப்பூர்வமான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.