எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், மக்கள் நலனுக்காக ஒற்றைப் பெண்ணாக நின்று சாதித்துக் காட்டியுள்ளார் கர்நாடக மாநிலம் வடகன்னட மாவட்டத்தைச் சேர்ந்த கங்கவ்வா (கங்கா பஜாந்திரி). கோடை காலத்தில் இவரது பைரம்பே கிராமம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தவித்து வந்தது. மக்கள் குடிக்க ஒரு சொட்டு நீரின்றி மைல்கணக்கில் நடந்து அலைவதைக் கண்டு மனமுடைந்த கங்கவ்வா, அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து, தானே சொந்தமாகத் தன் கிராமத்திற்கு கிணறு தோண்ட முடிவு செய்தார்.
மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வந்த மீதி நேரத்தில், வெறும் மண்வெட்டி மற்றும் கோடரியை மட்டுமே வைத்துக்கொண்டு தனியாகக் கிணறு தோண்ட ஆரம்பித்தார். ஆழமாகச் செல்லச் செல்ல மண்ணை மேலே இழுப்பது பெரும் சவாலாக இருந்தபோதிலும், கைகளில் ரத்தக் கொப்புளங்கள் வந்த பிறகும் அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.
சரியாக 6 மாத கடின உழைப்பிற்குப் பின், 40 அடி ஆழத்தில் சுவையான, சுத்தமான குடிநீர் சுரந்தது. அரசாங்க அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் செய்ய முடியாத இந்த மெகா சாதனையை ஒற்றைப் பெண்ணாகச் செய்து காட்டிய கங்கவ்வாவை, இப்பகுதி மக்கள் அன்போடு “நவீன பாகீரதி” என்று அழைத்து பாராட்டி வருகின்றனர்.
