இன்றைய அவசர உலகில் பணத்திற்காக மனிதநேயம் மடிந்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு ராபிடோ பைக் ரைடரின் வீடியோ இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையற்ற நபர் ஒருவர் தனது மொபைல் மூலம் ராபிடோ பைக் புக் செய்துள்ளார். ரைடர் அங்கு வந்ததும், அந்தப் பயணியை மிகவும் மரியாதையுடன் வரவேற்று, தலைக்கவசம் (Helmet) மாட்டி, பத்திரமாக அவரது இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பயணம் முடிந்ததும் வண்டிக் கூலியாக 58 ரூபாய் ஆகியுள்ளது.

​தான் பார்வையற்றவர் என்பதால், அந்தப் பயணி தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் ரைடரிடம் கொடுத்து, “நீங்களே தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என முற்றிலும் அறியாத ஒரு ரைடரை நம்பி ஒப்படைத்துள்ளார். அவரிடம் 70 ரூபாய் (மூன்று 20 ரூபாய், ஒரு 10 ரூபாய்) இருந்துள்ளது.

ரைடர் நினைத்திருந்தால் ஏமாற்றியிருக்கலாம், ஆனால் அவர் நேர்மையாக 50 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தைக் கொடுத்துள்ளார். ரைடரின் நேர்மையைக் கண்டு நெகிழ்ந்த பயணி, மீதிப் பணத்தையும் டிப்ஸாக (Tip) வைத்துக்கொள்ளுமாறு அன்புக்கட்டளையிட்டுள்ளார். இந்த நேர்மை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.