ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் செய்த காரியம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளது. பவுண்டரி லைன் அருகே அவர் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, கேலரியில் இருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்திற்குள் குப்பைகளை வீசினர்.

அதை சாதாரணமாகக் கடந்து போகாமல், 35 வயதான சூர்யகுமார் யாதவ் அமைதியாக நடந்து சென்று, அந்த குப்பைகளைத் தனது கைகளால் அள்ளி அங்கிருந்த பால் பாயிடம் (Ball Boy) கொடுத்துச் சரியாக அப்புறப்படுத்தினார். மைதானத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற சூர்யாவின் இந்த நற்பண்பு வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்து, நடப்பு சீசனில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை விட்டு வெளியேறிய போதிலும், சூர்யகுமாரின் இந்தச் செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில், மைதானத்திற்குள் குப்பைகளை வீசிய ரசிகர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சூர்யகுமார் யாதவ் நிஜ வாழ்விலும் ஒரு மிகச்சிறந்த ரோல் மாடல் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.