இணைய உலகில் எப்போது யார் நட்சத்திரமாக மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், தற்போது ஈராக்கைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் டொரின் ரோமல் ஷாமோ (Dorin Romel Shamo) தனது அதிரடி வாலிபால் ஆட்டத்தால் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார். ரசிகர்கள் இவரை ஈராக்கின் ‘பவர் குயின்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
டொரின் ரோமல் வெறும் விளையாட்டு வீராங்கனை மட்டுமல்ல, அவர் ஒரு மருத்துவ மாணவியும் கூட. டொஹுக் பகுதியைச் சேர்ந்த இவர், பல் மருத்துவப் படிப்பை தொடர்ந்து கொண்டே, தொழில்முறை வாலிபால் விளையாட்டிலும் முத்திரை பதித்து வருகிறார். 2021-ஆம் ஆண்டு ‘சன்ஹரிப் ஸ்போர்ட்ஸ் கிளப்’ மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், இன்று ஈராக் தேசிய மகளிர் வாலிபால் அணியின் முக்கிய வீராங்கனையாக உயர்ந்துள்ளார்.
View this post on Instagram
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வாலிபால் டொரினின் முதல் விருப்பம் கிடையாது. 15 வயதில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கிய அவர், தேசிய அளவில் ஈராக் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால், அவரது உயரத்தைக் கவனித்த பயிற்சியாளர் டாக்டர் ஹக்கர் பர்கி, அவரை வாலிபால் விளையாட்டிற்கு மாறும்படி அறிவுறுத்தினார். டொரினின் தாயார் மற்றும் அத்தையும் வாலிபால் வீராங்கனைகள் என்பதால், இந்த விளையாட்டில் அவர் மிக விரைவாகத் தேர்ச்சி பெற்றார்.
மைதானத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் டொரின், சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். யுனிசெஃப் (UNICEF) மற்றும் ஐநா பெண்கள் (UN Women) போன்ற அமைப்புகளுடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவித்து வருகிறார். படிப்பு மற்றும் விளையாட்டு என இரண்டிலும் சாதிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இவரது மேட்ச் வீடியோக்கள், ஈராக் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
