ஐபிஎல் 2026 தொடரில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த நிர்வாகத்தின் கணக்கு தற்போதைய நிலையில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியனாக்கிய ஹர்திக் பாண்டியா, மும்பை அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வருவார் என நிர்வாகம் நம்பியது. ஆனால், 2024 சீசனில் கடைசி இடத்தை பிடித்த மும்பை, கடந்த ஆண்டு சற்று முன்னேறினாலும், நடப்பு 19-வது சீசனில் மீண்டும் பலவீனமான அணியாகக் காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் பெற்ற 4-வது தொடர் தோல்வி, ஹர்திக் பாண்டியாவின் பொறுமையைச் சோதித்துள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “அணியில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமா அல்லது இதையே தொடர்ந்து வெற்றி பெறுவோம் என நம்ப வேண்டுமா என்பதை நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மும்பை அணியின் மிகப்பெரிய பலமான ஜஸ்பிரித் பும்ரா, நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் (114 பந்துகள்) ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பும்ராவின் பந்துவீச்சை மட்டும் நிதானமாக எதிர்கொள்ளும் எதிரணிகள், மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ரன்களைக் குவித்து விடுகின்றனர். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் ரன் குவிக்கத் தடுமாறுகின்றனர்.

ஒரு காலத்தில் மலிங்கா, மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்த மும்பை, இப்போது டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை நம்பியுள்ளது. ஆனால், இவர்கள் தங்களின் பழைய வேகத்தையும் துல்லியத்தையும் இழந்து ரன்களை வாரி வழங்குகின்றனர். மயங்க் மார்கண்டே 2018-க்கு பிறகு எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்கவில்லை. மிட்செல் சான்ட்னர் மற்றும் அல்லா கசன்பர் போன்ற வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களால் ஆடுகளத்தின் உதவி இல்லாமல் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பை நிர்ணயித்த போதும், பந்துவீச்சாளர்கள் அதனைத் தற்காத்துக்கொள்ளத் தவறினர். பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, மைதானத்தில் ஹர்திக் பாண்டியா கடும் கோபத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார். வீரர்களிடம் அவர் ஆக்ரோஷமாகச் சைகை காட்டியது அணியில் ஒற்றுமை இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதே சமயம், காயம் காரணமாகப் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, பெவிலியனில் அமர்ந்து கொண்டு பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டைக் கண்டு மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார். மொத்தத்தில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் தவறான திட்டமிடலும், பந்துவீச்சு துறையில் நிலவும் பலவீனமும் அந்த அணியைச் சரிவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றுள்ளது.