தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மின்னல் வேகத்தில் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தகுதியான வேட்பாளர்களுக்கான விருப்ப மனு விநியோகம் நாளை (பிப். 6) முதல் தொடங்குகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை இந்த மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் மிக முக்கியமான ஹைலைட் என்னவென்றால், விருப்ப மனு அளிக்கும் நபர்களைத் தலைவர் விஜய் நேரில் சந்தித்துத் தனித்தனியாக நேர்காணல் (Interview) செய்யப்போவதாக வெளியாகி உள்ள தகவல்தான். மற்ற கட்சிகளைப் போலல்லாமல், களத்தில் இறங்கும் வேட்பாளர்களின் தகுதி, மக்கள் செல்வாக்கு மற்றும் கொள்கை பிடிப்பை நேரடியாக ஆய்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால், தவெக சார்பில் சீட் எதிர்பார்க்கும் நிர்வாகிகள் இப்போதே தங்களது ‘பயோ-டேட்டா’க்களைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டனர். கேப்டன் விஜயகாந்த் பாணியில் விஜய் இந்த அதிரடி நேர்காணலை நடத்தப்போவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
