டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பணிக்காக இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை சிதைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுவதாகவும், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த அரசு இயங்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே நகராட்சித் துறைத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் பெரிய முறைகேடு மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்வுக்காக மாணவர்கள் செலவிட்ட உழைப்பும் காலமும் வீணடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மனதளவில் பெரும் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். நடந்த உண்மை என்ன என்பதை அரசு நேர்மையாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இளைஞர்களின் கனவுகளோடு விளையாடும் இந்த அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.