தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை நோக்கிய சூழலை உருவாக்கியுள்ள நிலையில், பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் வழங்கியுள்ள தேர்தல் தீர்ப்பை பாஜக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பையும் அதிகாரத்தையும் மக்கள் இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கவில்லை என்பதை உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதனால் புதிய அரசு அமைப்பதற்கான எந்த முயற்சியிலும் அல்லது நேரடி பங்களிப்பிலும் பாஜக ஈடுபடாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் எந்த ஒரு கட்சிக்கும் சட்டமன்றத்தில் பாஜக வாக்களிக்காது என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் இந்த ‘நடுநிலை’ முடிவு, தற்போது ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியைத் திரட்டப் போராடும் கட்சிகளுக்குப் பின்னடைவாகவும், தமிழக அரசியலில் பெரும் சஸ்பென்ஸாகவும் மாறியுள்ளது.