தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்திற்கு’ தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி நிர்மல்குமார் திடீர் வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் அதே நேரத்தில் நிர்மல்குமார் அங்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பலத்த யூகங்களைக் கிளப்பியுள்ளது.

​ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து இடதுசாரி கட்சிகளிடையே விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், நிர்மல்குமாரின் இந்த நேரடி வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விஜய் தரப்பிலிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு ஏதாவது முக்கியத் தூது அனுப்பப்பட்டதா அல்லது ஆதரவை உறுதிப்படுத்தும் பேச்சுவார்த்தையா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவு, தமிழகத்தில் விஜய்யின் ஆட்சி அமைக்கும் கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் ஒட்டுமொத்தத் தமிழகமும் பாலன் இல்லத்தின் பக்கம் திரும்பியுள்ளது.