அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா சனிக்கிழமையன்று அதிநவீன பல்குழல் ஏவுகணை அமைப்புகளை சோதித்துப் பார்த்தது. இந்தச் சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் ஆய்வு செய்தார்

இந்தச் சோதனையில் 600 மி.மீ விட்டம் கொண்ட 12 அதிநவீன ஏவுகணைகள் ஏவப்பட்டன. இது குறித்துக் கருத்து தெரிவித்த கிம் ஜோங் உன், “இந்த ஆயுதம் மிகவும் ஆபத்தானது; அதே சமயம் வசீகரிக்கத்தக்கது. நாட்டின் அணு ஆயுதத் தற்காப்புத் திறனைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது அவசியம். வெளிநாட்டு சக்திகள் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், இந்த ஏவுகணைகள் உடனடியாகப் பயன்படுத்தப்படும்,” என எச்சரித்தார்.

இந்த ஏவுகணைகள் 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டவை. சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், சுமார் 360 கி.மீ தொலைவில் கொரியக் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவை இந்த ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன. இதன் மூலம் எதிரிகளுக்குத் தங்களின் அழிவு சக்தியைப் புரிய வைத்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைச் சோதனையின் போது, கிம் ஜோங் உன்னின் மகளும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படுபவருமான கிம் ஜூ ஏ உடன் இருந்தார். ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஏவுகணைகள் பாய்ந்து செல்வதை அவர்கள் பார்வையிடும் புகைப்படங்களை அந்நாட்டு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ (KCNA) வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தச் செயலுக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை அப்பட்டமாக மீறும் செயல்” எனத் தெரிவித்துள்ள சியோல், இத்தகைய தூண்டுதல் நடவடிக்கைகளை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) என்ற பெயரில் வரும் மார்ச் 19 வரை கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு முன்னதாகப் பேசிய கிம் ஜாம உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், “இந்தப் பயிற்சியின் விளைவுகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருக்கும்” என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிம் ஜோம் உன்னைச் சந்தித்துப் பேசுவது நல்ல விஷயமாக இருக்கும் எனக் கருதுவதாகத் தென்கொரியப் பிரதமர் கிம் மின்-சோக் தெரிவித்துள்ளார்.